Sunday, December 26, 2004

சென்னையில் நிலநடுக்கமும் கடல் கொந்தளிப்பும்

காலை சுமார் 6-45 மணிக்கு, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வை, சென்னையின் சில பகுதிகளில் மக்கள் உணர்ந்தனர். நான் ஆழ்ந்த நித்திரையில் இருந்தேன்! கட்டில் சிறிது கிடுகிடுத்ததாக, என் மனைவி பின்னர் கூறினார். நான் வசிப்பது சென்னை மெரீனா பீச் அருகில். நங்கநல்லூர் பகுதியில் வசிக்கும் என் நண்பர், தான் எந்த அதிர்வையும் உணரவில்லை என்று கூறினார். அதனால், எனக்கென்னவோ இந்த நிலநடுக்கத்தின் Epicentre கடலுக்குள் மையம் கொண்டதால் தான், கடலை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே இதன் தாக்கம் அதிகம் இருந்ததாகத் தோன்றுகிறது. இது நடந்து சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின், கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது என அறிந்தேன். மாமல்லபுரம் மற்றும் கடலூர் பகுதிகளில் கடல் நீர் ஊருக்குள் புகுந்து விட்டதாக டிவியில் செய்தி வந்தது. நான் கண்டதை சொல்கிறேன்.

திருவல்லிக்கேணி பகுதியில் மக்கள் கூட்டம் கூட்டமாக பீச் நோக்கி சென்று கொண்டிருப்பதைப் பார்த்தவுடன், என்ன தான் நடந்தது என்று அறியும் ஆவலில், இருசக்கர வாகனத்தில், அந்த ஜன சமுத்திரத்தின் ஊடே பயணித்து, மெரீனா பீச்சை அடைந்தேன். கடல் நீர் கடற்கரைச் சாலை வரை வந்த சுவடுகள் தெரிந்தன. நான் பார்த்தபோது, கடல் நீர் ஒரு குட்டை போல, பீச் மணற்பரப்பில் மட்டுமே காணப்பட்டது. சில கார்களும், இருசக்கர வாகனங்களும், பல தள்ளு வண்டிகளும், கட்டுமரங்களும் கடல் நீர் உள்புகுந்து, மீண்டும் திரும்பி சென்றதால் அலைக்கழிக்கப்பட்டு, அங்குமிங்கும் தாறுமாறாக கிடந்தன. இதன் தாக்கம், மெரீனா முதல் லைட் ஹவுஸ் வரை காணப்பட்டது.

தற்போது, நான் பார்த்தவரை, கடல் அமைதியாகவே உள்ளது. பல மீனவர்கள் உஷாராக (மீண்டும் கடல் கொந்தளிப்பு வரலாம் என்ற பயத்தில்) தங்கள் கட்டுமரங்களை பீச் ரோட் அருகே அமைந்த சிலைகள் இருக்கும் இடத்திற்கு இழுத்து வந்து வைத்திருக்கின்றனர். நான் ஒரு ஹெலிகாப்டர் மேலே வட்டமிடுவதையும் கண்டேன். ஞாயிறு காலையில் பீச்சில் கிரிக்கெட் ஆடும் என் நண்பன் கடல் நீர் வேகமாக (6/7 அடி உயரத்தில்) நிலம் நோக்கி வருவதை கண்டு அலறியடித்து ஓடி வந்ததாகவும், ஒரு கார் (உள்ளே ஆட்களுடன்) மூழ்கடிக்கப்பட்டதாகவும் கூறினான். கடல் கொந்தளிப்பைப் பற்றிய டிவி செய்திகள் இப்போது தான் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. இதற்கு முன்னர், சிலர் இது குறித்து புரளிகளை பரப்பி பதட்டத்தை உருவாக்கினார்கள். 23 பேர் இறந்து விட்டதாக இப்போது சன் நியூஸ் செய்தியில் பார்த்தேன். இந்த வருத்தத்திற்குரிய சமயத்திலும், ஒரு சிலரின் "இந்த இயற்கை சீற்றத்திற்கு முக்கியக் காரணம் ஜயேந்திரர் கைது செய்யப்பட்டது தான்!!" என்ற கருத்து சிரிப்பை வரவழைத்தது! நம் மக்கள் இருக்கிறார்களே!!!!!!!

3 மறுமொழிகள்:

Vanthiyathevan said...

தகவலுக்கு நன்றி பாலா. தொடர்ந்து அறிந்த செய்திகளை கொடுங்கள்.இணைய நண்பர்களுக்கு கண்டிப்பாக பெருத்த உதவியாயிருக்கும்.

வந்தியத்தேவன்.

துளசி கோபால் said...

அன்புள்ள பாலா,

தகவலுக்கு மிகவும் நன்றி. நேற்று இரவுதான் என் கணவர் சென்னை போய்சேர்ந்திருக்கிறார். இடம் வேளச்சேரி என்பதால் அவர்களுக்கு ஒரு விவரமும் தெரியவில்லை!

என்றும் அன்புடன்,
துளசி.

said...

"இந்த இயற்கை சீற்றத்திற்கு முக்கியக் காரணம் ஜயேந்திரர் கைது செய்யப்பட்டது தான்
:-)
usha

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails